வெண்பாப் பதிவு(Venbaa Blog)

எனக்குத் தெரிந்த வெண்பாவில், எனக்குத் தெரிந்த உலகம்! (Daily happenings in Tamil Venbaa)

Tuesday, November 09, 2004

ரெண்டு(டே) நாள் ஆட்டம் ...

தூசி கிளம்புகின்ற தூளான பிட்ச்சில்
பாசி வழுக்கினாற்போல் பத்துவிக்கெட் - யோசித்தால்
ரெண்டுநாளில் வீழ்ந்திட்ட ரெண்டுபத்து பேருக்கும்
தண்டமாய்க் கூலி எதுக்கு ?

- சொ. மணியன்

Thursday, November 04, 2004

கவர்னர் டாட் சேஞ்ச் டாட் காம்

ஆட்டுக்குத் தாடிபோல் ஆட்சிக்கு இப்பதவி
நாட்டுக்குச் சொன்னவரை நன்றாகக் கேட்டிடணும்,
எப்பயனும் இல்லாத இந்தப் பதவிக்காய்
இப்படியோர் சண்டை எதுக்கு ?

முன்னாள் கவர்னரை மீண்டும் கொணர்ந்திங்கு
என்னென்ன செய்வாரோ இந்தப் பெருமக்கள்
இன்னும்நாம் காண்பதற்கு எத்தனை கூத்துகளோ,
சின்னத் தனம்தான்'ச்சீ' போ !

- சொ. மணியன்

Wednesday, November 03, 2004

புஷ்++++

இழுபறிச் சண்டையில் எப்படியோ வென்று
கழுத்துக்கு வந்திட்ட கத்தியையும் கொன்று
முழுசாய் எனக்கென்று மேலும்நான்(கு) ஆண்டு
பழத்தில் விழுந்தது பால்.

தனுஷ் கண்ணால வைபோகமே ...

துள்ளும் இளமைத் துடிப்பால், நடிப்பாலே
கள்ளத் தனமாய்நம் கண்கள் கவர்ந்தவன்
தெள்ளத் தெளிவாய்த் தமிழர்க்குத் தந்தானே
வெள்ளிக் கிழமை அழைப்பு

சந்திரமு கிக்காக சத்தியமாய் நாங்களெல்லாம்
பந்திக்கு ஏங்கினாற்போல் பாவமாய்க் காத்திருக்க
மந்திர வேகத்தில் மற்றொரு பக்கமாய்
வந்ததையா இந்த அழைப்பு

- சொ. மணியன்

Monday, November 01, 2004

பார்திவ் படேலுக்கு ஒரு பிரிவுபசாரம் ...

கும்ப்ளே அவரோடு கும்மாள மாய்வந்து
சும்மாவே பந்தைச் சுழற்றுகின்ற ஹர்பஜனும்
அம்மாடி என்னமாய் ஆளை அசத்துகிறார் !
கம்மென்று நீஇங்கு கீப்பரென நின்றபடி
நம்மாள்கள் ஜோரென்று நாளும் ரசித்திருக்க,
தம்போக்கில் பந்துகளும் தாண்டிப் பறந்துசெல்ல,
ரொம்பச் சுலபகேட்ச் ரண்டுமூன்று விட்டதினால்,
தம்பிநீ வீடுபோய்ச் சேர்.

Wednesday, October 27, 2004

நாக்பூர் டெஸ்ட் போட்டி ....

முழங்கைப் பிழையால் முழங்காத சங்காய்
சுழன்றாடும் சச்சின் சுருண்டார் - கிழக்கு
இருண்டதுபோல் மற்றவரும் ஏனோ விழுந்தார்
வருமா நமக்(கு)இன்னோர் சான்சு ?

- சொ. மணியன்

7/g ரெயின்போ காலனி - வெண்பா(?)வில் ஒரு திரைப்பட விமர்சனம் (??)

ரெயின்போ காலனியில், ராத்திரி வேளை
மயில்போல் ஒருபெண், மட்டமான ஓர்ஆண்
·பெயிலாகும் இக்காதல் என்றெண்ணி னேன்நான்
தயிர்சாதத் தோடு தந்தூரி சிக்கன்போல்
சற்றும் பொருந்தாமல் ஸில்லியாய்த் தோன்றிடினும்
குற்றம் இல்லாத காதலராய் அவ்விருவர்
'முற்றும்' மறந்த மெகாத்தொடராய் என்னுள்ளே
முற்றும் நிறைந்துவிட்டார் காண் !

- சொ. மணியன்

Tuesday, October 26, 2004

வீரப்பன் ...

வீரப்பன் போனான், விஜயகுமார் புண்ணியத்தில்,
ஆரப்பா அங்கே, அவரைப்போய் சந்தித்து,
பூரணப் பொற்குடத்தில் பொங்கிவரும் காவிரி
நீரள்ளித் தூவியே வாழ்த்து.

வீரப்பன் கண்ணிலொன்று விட்டுவிட்டுத் தான்துடிக்க,
கோரச் சதிவெளியே காத்திருக்க, பாராமல்
டாக்டரைத் தேடியே தர்மபுரி போனவனை
சீக்கிரமாய்க் கொன்றுபோட் டாச்சு.

வணக்கம்

இந்தப் பதிவில், அன்றாட நிகழ்வுகளைப்பற்றிய, எனது அரைகுறை வெண்பா முயற்சிகளை இடவிருக்கிறேன் - திட்டுபவர்கள் திட்டலாம், திருத்துபவர்கள் திருத்தலாம் !

- சொ. மணியன்